என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இரட்டை இலை சின்னம்"
- டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் புதிய மனு தாக்கல்.
- கட்சி உடைந்து நிற்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி அவசர மனு ஒன்றை தொடர்ந்துள்ளார்.
மனு மீது நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பான மனுவில," தொண்டர்களையும், கட்சியையும் பாதிக்கும் என்பதால் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும்.
இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தி படுதோல்வியை தழுவுவதை அதிமுக தொண்டர்கள் விரும்பவில்லை.
கட்சி உடைந்து நிற்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
- சட்ட விரோதமாக பொதுக்குழுவை கூட்டி சட்ட விரோதமாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
- தேர்தல் ஆணையம் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு இதில் தலையிட்டு முடிவு எடுக்க வேண்டும்.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு 2 பக்க கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
அ.தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான கால அவகாசம் வருகிற 26-ந்தேதி வரை நிலுவையில் உள்ளது. எனவே பாராளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கு ஒதுக்க வேண்டும்.
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் படிவம் ஏ மற்றும் பி-யில் கையெழுத்திடுவதற்காக உள்ள அதிகாரத்தை தங்களுக்கு வழங்க வேண்டும். சட்ட விரோதமாக பொதுக்குழுவை கூட்டி சட்ட விரோதமாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது தொடர்பாக தொடரப்பட்ட சிவில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த சிவில் வழக்கு காரணமாக இரட்டை இலை சின்னம் பெறுவதை இழக்க நேரிடும் என்று அச்சப்படுகிறோம். எனவே தேர்தல் ஆணையம் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு இதில் தலையிட்டு முடிவு எடுக்க வேண்டும். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் என அங்கீகரித்து தங்கள் வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை என்ற முடிவில் உறுதியாக இருக்கிறோம்.
- இரட்டை இலை சின்னம் முடக்கப்பட வாய்ப்பு இல்லை.
சென்னை:
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா அளித்துள்ள பேட்டி வருமாறு:-
தேர்தல் களத்தில் மக்களை சந்திக்க அ.தி.மு.க. தயாராக உள்ளது. பா.ம.க.வுடன் சில கட்ட பேச்சுவார்த்தை நடந்தது உண்மை தான். யார் வந்தாலும் வராவிட்டாலும் தனித்து நிற்க அ.தி.மு.க. தயாராக இருக்கிறது. பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை என்ற முடிவில் உறுதியாக இருக்கிறோம்.
பல்வேறு சவால்களை திறம்பட கையாண்டு வந்துள்ளோம். எத்தனை தடைகள் வந்தாலும் அ.தி.மு.க. துணிச்சலாக எதிர் கொள்ளும். கட்சிக்கே தொடர்பில்லாத சூர்யமூர்த்தி இரட்டை இலை குறித்து வழக்கு போட்டுள்ளார். சூரிய மூர்த்தியை பின்னால் இருந்து யாரோ தூண்டி விடுகிறார்கள்.
இரட்டை இலை சின்னம் முடக்கப்பட வாய்ப்பு இல்லை. இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்ற ஓ.பி.எஸ். கனவு பலிக்காது. சி.ஏ.ஏ. விவகாரத்தில் தி.மு.க. தொடர்ந்து பொய் கூறி வருகிறது.
அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி சரிந்தது என்ற மாயையை உருவக்க முயற்சி நடக்கிறது. அது எடுபடாது. தமிழ்நாட்டில் மக்களுடன் அ.தி.மு.க. அமைத்துள்ள கூட்டணிதான் மெகா கூட்டணி.
இவ்வாறு அவர் கூறினார்.
- பழனிசாமிக்கும், பன்னீர்செல்வத்திற்கும் இடையே இருந்த பதவி சண்டை காரணமாக தமிழ்மகன் உசேன் கையெழுத்து போடும் வினோதமான, விசித்திரமான நிலை ஏற்பட்டுள்ளது.
- நிரந்தரமாக தமிழ்மகன் உசேன் தான் கையெழுத்து போடமுடியும் என உச்சநீதிமன்றம் கூறினால் நிலைமை என்ன ஆகும்.
தஞ்சாவூா்:
தஞ்சையில் இன்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு இடைத்தேர்தலில் எங்களுக்கு குக்கர் சின்னம் கிடைக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் தேர்தல் ஆணையம் 7-ந் தேதி தான் குக்கர் சின்னம் கிடையாது என அறிவித்தது. முன்கூட்டியே அறிவித்திருந்தால் நாங்கள் சுப்ரீம் கோர்ட் சென்று குக்கர் சின்னம் எங்களுக்கு கிடைக்க அனுமதி வாங்கி இருப்போம். ஆனால் அதற்கான கால அவகாசம் இல்லாததால் இடைத்தேர்தலில் அ.ம.மு.க. போட்டியிடவில்லை. இருப்பினும் பாராளுமன்ற தேர்தலில் கண்டிப்பாக குக்கர் சின்னம் தான் எங்களுக்கு கிடைக்கும். இடைத்தேர்தல் என்பதால் கிடைக்கவில்லை அவ்வளவுதான்.
தி.மு.க. மற்றும் எடப்பாடி பழனிசாமி அணிக்கு எதிராக தான் அ.ம.மு.க உள்ளது. இதனால் இடைத்தேர்தலில் எங்கள் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் தி.மு.க மற்றும் எடப்பாடி பழனிசாமி அணியை புறக்கணிப்பார்கள். அவர்களுக்கு மாற்றாக தங்களது வாக்கை பதிவு செய்வார்கள்.
எடப்பாடி பழனிசாமி அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கினாலும் தற்போது அந்த சின்னம் செல்வாக்கு இழந்ததாகவே கருதப்படுகிறது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கையில் இரட்டை இலை சின்னம் இருந்தபோது செல்வாக்கு மிக்கதாக விளங்கியது. தற்போது அதிகாரம், ஆணவப்போக்குடன் செயல்படும் எடப்பாடி பழனிசாமியால் இரட்டை இலை சின்னம் மதிப்பு இழந்து விட்டது. அவர்கள் இடைத்தேர்தலில் வெற்றி பெற முடியாது. தற்போது ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள். விரைவில் அவர்கள் அணியில் இருப்பவர்கள் உண்மையை உணர்ந்து எங்களுடன் கைகோர்க்கும் நிலை வரும். அடுத்த தேர்தலிலே அது கைகூடும் என எதிர்பார்க்கிறோம்.
பழனிசாமிக்கும், பன்னீர்செல்வத்திற்கும் இடையே இருந்த பதவி சண்டை காரணமாக தமிழ்மகன் உசேன் கையெழுத்து போடும் வினோதமான, விசித்திரமான நிலை ஏற்பட்டுள்ளது. நிரந்தரமாக தமிழ்மகன் உசேன் தான் கையெழுத்து போடமுடியும் என உச்சநீதிமன்றம் கூறினால் நிலைமை என்ன ஆகும்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு கடலில் பேனா சிலை வைப்பதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தற்போது நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாடு அரசு பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை. இந்த சூழ்நிலையில் கடலில் பேனா சிலை தேவைதானா என பலரும் குரல் எழுப்புகின்றனர். ஏன் கருணாநிதி நினைவிடத்திலோ அல்லது அறிவாலயத்திலேயோ தி.மு.க. தனது சொந்த நிதியில் பேனா சிலை வைத்தால் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். அதற்கு மாறாக நிலைமை இருக்கும் போது தான் பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
அதானி பிரச்சனை தற்போது அரசியல் பிரச்சினையாக மாறி உள்ளது. இது குறித்து மத்திய அரசு தான் பதில் கூற வேண்டும். நான் பதில் கூறுவது சரியாக இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது துணை பொது செயலாளர் ரங்கசாமி, தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் சேகர் மற்றும் பலர் உடனிருந்தனர்.
- வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தினார்.
- இடைத்தேர்தல் குறித்து ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே 4 முறை கட்சி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் இன்று 5-வது முறையாக வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் கட்சி நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இது குறித்து கட்சி நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
இடைத்தேர்தல் குறித்து ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் 12-ந்தேதி வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் திடீரென அந்த கூட்டம் நாளை நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடந்துவருகிறது. இந்த நிலையில் இரட்டை இலை சின்னம் கிடைத்த பின்பு இன்று திடீரென அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர்கள், மற்றும் மூத்த நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
- எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வை சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தலின் பேரில் தேர்தல் ஆணையம் அங்கீகரித்து இருப்பதால் ஓ.பன்னீர்செல்வம் தனது வேட்பாளரை திரும்ப பெற்றுள்ளார்.
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தொண்டர்கள் ஒரே தலைமையின் கீழ் ஒன்றுபட்டு பணியாற்றும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது.
சென்னை:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 31-ந்தேதி தொடங்கியது. இன்று மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.
இடைத்தேர்தலில் போட்டியிட இன்று மதியம் வரை 70-க்கும் மேற்பட்டவர்கள் மனுதாக்கல் செய்திருந்தனர். அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசும் இன்றுதான் மனு தாக்கல் செய்தார். தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., அ.ம.மு.க., நாம் தமிழர், தே.மு.தி.க. ஆகிய கட்சிகளுக்கு இடையே 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
என்றாலும் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு இடையேதான் வழக்கம் போல பலப்பரீட்சை உருவாகி இருக்கிறது. ஓ.பன்னீர்செல்வமும் போட்டி வேட்பாளரை அறிவித்ததால் அ.தி.மு.க. வேட்பாளராக யார் கருதப்படுவார் என்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதுபோல யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்பதிலும் பரபரப்பு நிலவியது.
இந்தநிலையில் சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தலின் காரணமாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்கும் அ.தி.மு.க.வின் அவை தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு வேட்பாளரை தேர்வு செய்வதற்கு அதிகாரம் வழங்கப்பட்டது. அதன்படி அவர் பொதுக்குழு உறுப்பினர்களில் 98 சதவீதம் பேரிடம் கையெழுத்து பெற்று தேர்தல் ஆணையத்திடம் நேற்று சமர்பித்தார்.
அதை தலைமை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டு அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது. இது தொடர்பாக ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி கே.சிவக்குமாருக்கு டெல்லி தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்து கடிதம் அனுப்பியது.
அதில், "அ.தி.மு.க. சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு ஏ, பி படிவத்தில் கையெழுத்திட்டு வழங்கும் அதிகாரம் தமிழ் மகன் உசேனுக்கு வழங்கப்படுகிறது. அதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொள்ளவும்" என்று கூறி இருந்தது.
தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவுறுத்தல் மூலம் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள வேட்பாளருக்கு அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் கிடைப்பது உறுதியானது. இதை தேர்தல் அதிகாரி சிவக்குமார் உறுதிப்படுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "தலைமை தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதம் எனக்கு வந்துள்ளது. தலைமை தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப நான் இரட்டை இலை சின்னத்தை அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஒதுக்கீடு செய்வேன்.
அ.தி.மு.க. அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் கையெழுத்திட்டு தரும் ஏ, பி படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்" என்று கூறினார். இதன் மூலம் அ.தி.மு.க.வில் நிலவி வந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வை சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தலின் பேரில் தேர்தல் ஆணையம் அங்கீகரித்து இருப்பதால் ஓ.பன்னீர்செல்வம் தனது வேட்பாளரை திரும்ப பெற்றுள்ளார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தொண்டர்கள் ஒரே தலைமையின் கீழ் ஒன்றுபட்டு பணியாற்றும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது.
இதனால் உற்சாகம் அடைந்துள்ள அ.தி.மு.க. நிர்வாகிகள் இன்று தங்களது பிரசாரத்தை சுறுசுறுப்புடன் தொடங்கி உள்ளனர். வெளிமாவட்டங்களில் இருந்தும் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஈரோடுக்கு செல்ல தொடங்கி இருக்கிறார்கள்.
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் கிடைக்குமா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.
- எடப்பாடி பழனிசாமி அணியின் கோரிக்கையை ஏற்க தேர்தல் ஆணையம் மறுப்பதால் இந்த தேர்தலில் இரட்டை இலை சின்னம் தானாகவே முடங்குகிறது.
சென்னை:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந்தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என இரு அணிகளும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. எடப்பாடி பழனிசாமி தரப்பில் கே.எஸ்.தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் செந்தில் முருகன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
அ.தி.மு.க.வின் இரு அணிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ளதால் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடப் போவது யார்? இரட்டை இலை சின்னம் யாருக்கும் கிடைக்காமல் முடங்கி விடுமா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஈரோடு இடைத்தேர்தலில் என் கையெழுத்துடன் கூடிய வேட்பாளர் பெயரை ஏற்க தேர்தல் ஆணையம் மறுக்கிறது. எனவே என்னை அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரித்து நான் கையெழுத்திட்ட வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் 3 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி இருந்தது. அதன்படி தேர்தல் ஆணையம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் அதி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் இன்னமும் ஏற்கவில்லை.
இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால் பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க கோரி, யாரும் தேர்தல் ஆணையத்தை அணுகவில்லை. இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்ற எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கை தொடர்பாக தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவெடுப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
எனவே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் கிடைக்குமா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கான ஏ,பி படிவங்களில் கையெழுத்திட ஓ.பன்னீர் செல்வம் தயாராக இருக்கிறார். அதே நேரத்தில் அந்த படிவத்தில் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட தயாராக இல்லை என்பதால் இரட்டை இலை சின்னம் கிடைக்காது. வருகிற 10-ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அதற்குள் தீர்ப்பு வராவிட்டாலும் இருவருக்குமே இரட்டை இலை சின்னம் கிடைக்காமல் போகலாம். இப்போதைய சூழ்நிலையில் இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கோ அல்லது ஓ.பன்னீர்செல்வத்துக்கோ இரட்டை இலை சின்னம் கிடைப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது.
எடப்பாடி பழனிசாமி அணியின் கோரிக்கையை ஏற்க தேர்தல் ஆணையம் மறுப்பதால் இந்த தேர்தலில் இரட்டை இலை சின்னம் தானாகவே முடங்குகிறது. எனவே இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என இரு தரப்பினருமே சுயேட்சை சின்னத்தை ஏற்பதை தவிர வேறு வழி இல்லை.
எனவே சுயேட்சை சின்னத்தை பெற்றாலும் தங்களின் பலத்தை காட்ட இரு அணியினருமே தயாராகி வருகிறார்கள்.
- அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்தாலும், இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.
- இரட்டை இலை சின்னம் விவகாரம் குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பு இன்று வர இருக்கிறது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு போட்டியிடுகிறார். இதேபோல் ஓ.பி.எஸ். அணி சார்பில் செந்தில்முருகன் என்பவர் போட்டியிடுகிறார்.
எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். ஆகியோர் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளதால் யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்தனர். அதில் கடந்த 11.7.2022-ல் நடைபெற்ற பொதுக்குழுவின் அடிப்படையில் தங்கள் அணிக்கு தான் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தனர்.
இந்த மனுவின் மீது பதில் அளிக்குமாறு ஓ.பி.எஸ். தரப்புக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், அ.தி.மு.க.வின் பிரதிநிதி என்ற அடிப்படையில் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி தரப்புக்கு ஒதுக்கக்கூடாது என்று ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதேபோல் தேர்தல் ஆணையத்தின் தரப்பில் அளிக்கப்பட்டிருந்த பதில் மனுவில், 2022 ஜுலை 11-ந் தேதி அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு நிலுவையில் இருப்பதால், இதுவரையில் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை.
அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்தாலும், இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. இடைத்தேர்தலில் இரட்டை இலைச் சின்னம் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி உரிய முடிவு எடுப்பார் எனத் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் இந்த மனுவின் மீதான விசாரணை வெள்ளிக்கிழமை (இன்று) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாநகராட்சி கமிஷனரும் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சிவக்குமாரிடம் கேட்டபோது, இரட்டை இலை சின்னம் விவகாரம் குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பு இன்று வர இருக்கிறது. தீர்ப்பு வந்ததும் அதற்கு தகுந்தாற்போல் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.
- எடப்பாடி பழனிசாமியின் இடையீட்டு மனு விசாரணைக்கு உகந்தது இல்லை என்று கூறி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
- ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி அணிக்கு கிடைக்குமா? அல்லது ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு கிடைக்குமா? அல்லது இரட்டை இலை முடக்கப்படுமா? என்ற நிலை உள்ளது.
சென்னை:
டெல்லியில் பிரதமர் மோடியை அ.தி.மு.க. எம்.பி. தம்பித்துரை இன்று காலையில் திடீரென சென்று சந்தித்து பேசி உள்ளார்.
பாராளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் மோடியின் அறையில் இந்த சந்திப்பு சுமார் 10 நிமிட நேரம் நடந்தது.
பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி உள்ள நிலையில் அதற்கு நன்றி தெரிவிக்க சந்தித்து விட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டாலும் அரசியல் ரீதியாகவே இந்த சந்திப்பு நடந்ததாக தெரிய வந்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. இரு அணிகளும் போட்டியிடும் நிலையில் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி அணிக்கு கிடைக்குமா? அல்லது ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு கிடைக்குமா? அல்லது இரட்டை இலை முடக்கப்படுமா? என்ற நிலை உள்ளது.
இந்த சூழலில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கில் இரட்டை இலை சின்னம் கேட்டு எடப்பாடி பழனிசாமி தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்ததற்கு தேர்தல் கமிஷன் தனது நிலைப்பாட்டை நாளை தெரிவிக்க உள்ளது.
இந்த சூழலில் எடப்பாடி பழனிசாமியின் இடையீட்டு மனு விசாரணைக்கு உகந்தது இல்லை என்று கூறி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
எனவே இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு கிடைக்குமா? கிடைக்காதா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடியை எடப்பாடியின் ஆதரவாளரான தம்பித்துரை எம்.பி. சந்தித்து பேசியது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
- பா.ஜ.க., அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க முயற்சி செய்வது காங்கிரசுக்கு ஏன் கசக்கிறது.
- தி.மு.க.வின் தோளில் ஏறிக்கொண்டு எட்டிய தூரத்திற்கு எதிரி இல்லை என காங்கிரஸ் சொல்லிக் கொண்டிருக்கிறது.
நெல்லை:
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று நெல்லையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அனைத்து கட்சிகளும் வேட்பாளர் அறிவிப்பதை போன்று அ.தி.மு.க.வும் வேட்பாளர் அறிவித்துள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. உள்ளதால் ஓ.பி.எஸ்., பா.ஜ.க.வின் நிலைப்பாடு அறிவிப்புக்கு பின் முடிவு எடுப்பதாக சொல்லி உள்ளார்.
தி.மு.க. ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்பது தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் குறிக்கோள். அதற்காக இரவு, பகல் பாராது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பாடுபடுகிறார்கள்.
மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதி மிகப்பெரிய அறிஞர். அவரின் நினைவாக பேனா சின்னம் வைப்பது தவறில்லை. கடுமையாக நிதி நெருக்கடியில் அரசு இருக்கும்போது தி.மு.க. கட்சியின் சார்பாக அந்த சின்னத்தை வைத்துக் கொள்ளலாம் .
கடலில் வைத்து சுற்றுச்சூழலை மாசுபடச் செய்யாமல் அறிவாலயம் உள்ளிட்ட தி.மு.க.வின் சொந்த இடங்களில் வைத்துக் கொள்ளலாம்.
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் ஓர் அணியில் பணியாற்றினால் தி.மு.க.வை வீழ்த்தலாம் என்பது என்னுடைய கருத்து. இதையே தான் ஓபி.எஸ்.சும் சொல்லி உள்ளார். ஓ.பி.எஸ். வேட்பாளர் அறிவிக்கிறாரா? என்பதை பார்த்து அவரது நிலைப்பாட்டை அறிந்து, இணைந்து பணியாற்றுவது குறித்து முடிவெடுக்கலாம். இன்னும் நேரம் இருக்கிறது.
ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இருவரும் இரட்டை இலை சின்னத்திற்கு சண்டையிட்டால் 2017-ல் நான் போட்டியிடும் போது நீதிமன்றம் இரட்டை இலை சின்னம் இருவருக்கும் இல்லை என்ற முடிவெடுத்ததை போல் கூட முடிவெடுக்கலாம்.
பா.ஜ.க., அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க முயற்சி செய்வது காங்கிரசுக்கு ஏன் கசக்கிறது. தி.மு.க.வின் தோளில் ஏறிக்கொண்டு எட்டிய தூரத்திற்கு எதிரி இல்லை என காங்கிரஸ் சொல்லிக் கொண்டிருக்கிறது.
களத்தில் தனியாக இறங்கி நின்று காங்கிரஸ் போட்டி போட்டால் அவரது நிலை தெரியும்.
இரட்டை இலை சின்னத்திற்கு தேர்தல் ஆணையம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்திட வேண்டும் என்பதை நிலைப்பாடாக கொண்டுள்ளது.
இருவரும் இணைந்து கையொப்பம் இடவில்லை என்றால் சின்னம் முடக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஒரு சிலரின் சுயநலத்திற்காக அ.தி.மு.க. இன்று பலவீனம் அடைந்துள்ளது. அது எங்களுக்கு மிகவும் வருத்தத்தை தருகிறது.
சுயநலத்தோடும் பணத்திமிரிலும் சிலர் செயல்படுவதால் தான் 5 ஆண்டுகளுக்கு முன்பே அ.தி.மு.க.வில் இருந்து வெளியேறி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தொடங்கி குக்கர் சின்னத்தில் போட்டியிட்டோம்.
கடந்த தேர்தல்களில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் வருங்காலத்தில் வாய்ப்பு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் போராடுகிறோம். தி.மு.க. வை வீழ்த்துவதற்கு ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் இணையும் காலம் வரும். காலம் அனைத்திற்கும் தீர்வு கொடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு முடிந்து தீர்ப்பு வராமல் உள்ளது.
- இடையீட்டு மனுவை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் மனு தொடர்பாக 3 நாட்களுக்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கும், ஓ. பன்னீர்செல்வம் தரப்புக்கும் உத்தரவிட்டனர்.
சென்னை:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க.வில் இரு அணிகளாக செயல்படும் நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி ஒரு வேட்பாளரை நிறுத்துகிறது.
இதேபோல் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான மற்றொரு அணியும் தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்து உள்ளது.
இது தொடர்பாக கூட்டணி கட்சி தலைவர்களை இரு அணியினரும் சந்தித்து ஆதரவு கேட்டு வருகின்றனர்.
இதில் எந்த அணிக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த சூழ்நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு முடிந்து தீர்ப்பு வராமல் உள்ளது.
இதனால் இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் தங்கள் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர்கள் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று இடையீட்டு மனு தாக்கல் செய்தனர்.
அதில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்ட வேட்பு மனுவையும், பொதுக்குழு தீர்மானங்களையும் தேர்தல் ஆணையம் ஏற்க உத்தரவிட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்தை எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
இந்த இடையீட்டு மனுவை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் மனு தொடர்பாக 3 நாட்களுக்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கும், ஓ. பன்னீர்செல்வம் தரப்புக்கும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 3-ந் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.
இதுபற்றி ஓ.பன்னீர் செல்வம் அணியின் செய்தி தொடர்பாளர் புகழேந்தி கூறியதாவது:-
எடப்பாடி பழனிசாமி அணியினர் இரட்டை இலை சின்னம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் முறையிடுவதற்கு காரணம் என்ன என்றால் அவர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காது என்று தெரிந்து விட்டது.
அப்படியென்றால் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் எங்கள் வசம்தான் இரட்டை இலை சின்னம் உள்ளதாக கருத வேண்டி உள்ளது.
சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு தொடர்பான நோட்டீசு எங்களுக்கு இன்னும் வந்து சேரவில்லை. வந்தாலும் பதில் அனுப்பப்படும்.
இதற்காக எங்களது மூத்த வழக்கறிஞர்கள் குரு கிருஷ்ணகுமார், ரஞ்சித் குமார் ஆகியோர் ஓ.பன்னீர் செல்வத்துடன் ஆலோசித்து முடிவெடுப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இருவரில் ஒருவரை ஆதரித்தால் சர்ச்சை ஏற்படலாம் என்ற நிலையில் பாரதிய ஜனதா தவிப்புக்குள்ளானது.
- இரு அணிகளில் யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமோ அவர்களை ஆதரிப்பது என்று பாரதிய ஜனதா மூத்த தலைவர்கள் முடிவு செய்து உள்ளனர்.
சென்னை:
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டதும் அடுத்த ஒரு மணி நேரத்தில் தேர்தல் பணிக்குழுவை தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.
இதனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பா.ஜனதா களம் இறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஈரோடு கிழக்கு தொகுதியில் பா.ஜனதா மேலிடம் ரகசிய ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த சர்வேயில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பாரதிய ஜனதா தனித்து போட்டியிட்டால் சுமார் 8 ஆயிரம் வாக்குகளுக்கு குறைவாகவே கிடைக்கும் என்பது தெரியவந்தது.
மக்கள் மத்தியில் ஆதரவு இல்லை என்பதால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடும் முடிவை பாரதிய ஜனதா கைவிட்டது. இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. கூட்டணியில் நீடிப்பதால் அ.தி.மு.க.வின் இரு அணிகளில் எந்த அணிக்கு பாரதிய ஜனதா ஆதரவு கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இருவரில் ஒருவரை ஆதரித்தால் சர்ச்சை ஏற்படலாம் என்ற நிலையில் பாரதிய ஜனதா தவிப்புக்குள்ளானது. இந்த இரு அணிகளில் யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமோ அவர்களை ஆதரிப்பது என்று பாரதிய ஜனதா மூத்த தலைவர்கள் முடிவு செய்து உள்ளனர்.
ஒருவேளை இரட்டை இலை சின்னம் இரு அணிகளுக்கும் கிடைக்காமல் முடங்கும் பட்சத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அணியினரும், ஓ.பன்னீர் செல்வம் அணியினரும் சுயேட்சை சின்னத்தில்தான் போட்டியிட முடியும். ஆனால் சுயேட்சை சின்னத்துக்கு ஆதரவு கொடுக்க மாட்டோம் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை திட்டவட்டமாக அறிவித்து உள்ளார்.
இத்தகைய சூழ்நிலையில் தனித்து போட்டியிடாமலும், அதே சமயத்தில் அ.தி.மு.க.வை ஆதரிக்காமலும் செயல்பட பா.ஜ.க. தலைவர்கள் திட்டமிட்டு உள்ளனர். அதன்படி அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காத நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடாமல் நடுநிலை வகிக்க முடிவு செய்து உள்ளனர்.
இதுதொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் அளித்துள்ள பேட்டியில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சூசகமாக சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அந்த பேட்டியில் அவர், "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பா.ஜனதாவுக்கு பரீட்சார்த்த களம் அல்ல. 2024-ம் ஆண்டு தேர்தல்தான் இலக்கு" என்று குறிப்பிட்டு உள்ளார்.
எனவே நாளை நடக்கும் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் இந்த அடிப்படையில்தான் தீர்மானங்கள் கொண்டு வரப்படும் என்று தெரிய வந்துள்ளது. இடைத்தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கும் நிலையில் அந்த தொகுதியில் உள்ள பா.ஜ.க. தொண்டர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப வாக்களிக்கலாம் என்று அறிவிக்கவும் தமிழக பாரதிய ஜனதா முடிவு செய்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்